டில்லி:

ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 20 பேர் தகுதி இழப்பு செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக முதல்வர் கெஜ்ரிவால் நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும்.

21 எம்.எல்.ஏ.க்களும் ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது.

இரட்டை ஆதாய புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்தார். இதனால் அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதர 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரித்தது. இந்த விவகாரத்தில் 20 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பதவி இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.