அகமதாபாத்:
10 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வழக்கில் விஹெச்பி அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனால் அவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் குஜராத் வந்தனர். இதற்கிடையில் அவரை போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல் பரவியது.
விஹெச்பி தொண்டர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குஜராத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதைதொடர்ந்து தொகாடியாவை போலீசார் கைது செய்யவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதை 4 தனிப்படைகள் தேடி வருவதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அகமதாபாத் விமானநிலையம் செல்லும் வழியில் மயங்கிய நிலையில் சாலையில் கிடந்த தொகாடியா மீட்கப்பட்டு சாகிபாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தொகாடியாக இன்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘நேற்று காலை நான் அலுவலகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தேன். அப்போது அலுவலகத்திற்கு வந்த ஒரு நபர் என்னை போலீஸ் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்போவதாக தெரிவித்தார். ராஜஸ்தான் போலீசார் என்னை கைது செய்ய வந்திருப்பதை அறிந்தேன். இதையடுத்து நான் அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன். எனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விஹெச்பி தொண்டர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘பின்னர் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள எனது வக்கீல்களை தொடர்பு கொண்டேன். நீதிமன்றத்தில் சரணடையுமாறு அவர்கள் தெரிவித்தனர். அதனால் ஜெய்ப்பூர் செல்ல விமானநிலையம் சென்றேன். அப்போது கோதார்பூர் அருகே சென்ற பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
நான் எங்கும் தப்பிச் செல்லவில்லை. என் மீது குஜராத், ராஜஸ்தான் போலீசில் எவ்வித புகாரும் இல்லை. ஆனால், ஏன் எனது அறையை குஜராத் போலீசார் சோதனையிட்டனர் என்று தெரியவில்லை?. நான் குற்றவாளி அல்ல. நான் எந்த தவறும் செய்யவில்லை. குற்றப்பிரிவு போலீசார் எவ்வித அரசியல் அழுத்தத்தின் கீழ் செயல்படக் கூடாது’’ என்று தெரிவித்தார்.