சென்னை:

‘ரிபப்ளிக் டிவி’ ‛மைக்கை எடுக்க சொன்னதால் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் பேட்டியை சென்னை பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்தனர்.

குஜராத் மாநிலம் வட்கம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் தலித் அமைப்பின் தலைவர். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் குஜராத் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், மோடியை எதிர்த்து மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். கல்வி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருடன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு வந்த மேவானி அவருக்கு முன்பிருந்த ‘ரிபப்ளிக் டிவி’ ‛மைக்கை அகற்றும்படி கூறினார். ‘‘அகற்றும் வரை பேச மாட்டேன். அர்னாப் கவுஸ்மி நடத்தும் ரிபப்ளிக் டிவி.யிடம் நான் பேசமாட்டேன் என்பது எனது கொள்கை. அந்த டிவி.க்கு நான் எந்த பதிலும் கூற மாட்டேன். பேட்டியையும் ரத்து செய்வேன்’’ என்றார்.

இதற்கு சக நிருபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘இது பிரத்யேக பேட்டி கிடையாது. பொதுவான பேட்டி என்பதால்குறிப்பிட்ட ஒரு மைக்கை மட்டும் எடுக்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது’’ என்றனர். இதற்கு மேவானி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அனைத்து நிருபர்களும் பேட்டியை புறக்கணித்து சென்றனர். இதனால் மேவானி பேட்டி அளிக்க முடியாமல் திரும்பிச் சென்றார்.