டில்லி,
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் 4 பேர் அதிருப்தி தெரிவித்து பத்திரிகையாளர்களை சந்தித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து, அவர்களுக்கு இடையே சமரசம் செய்ய 7 பேர் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தலைமை நீதிபதி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுப்பதாகவும், இப்படியே போனால் ஜனநாயகம் தலைக்காது என்ற நீதிபதிகள், இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் பதில் இல்லை. இதன் காரணமாகவே இந்திய வரலாற்றில் இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வேறு வழியே இல்லாததால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம் என்றனர்.
இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. மேலும் மத்திய அரசும் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இதுகுறித்து இந்திய பார்கவுன்சில் கூடி அவசர ஆலோசனை நடத்தியது. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பார் கவுன்சில் தலைவர், மன்னன் குமார் மிஸ்ரா கூறியதாவது:
தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் சிலர் வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது துரதிருஷ்டவமானது. இதை தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற விசயங்கள் பொதுவெளியில் விவாதிப்பதால் நீதிபதி மீதான மரியாதை பலவீனப்படும் என்றார்.
மேலும், இந்த பிரச்சினை குறித்து இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்படும் வகையில் பேசுவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவினர் இரு தரப்பையும் சந்தித்து பேசி முடிவு செய்வார்கள் என்றார்.
இந்த விஷயத்தில், தலையிட மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்ற அவர், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்வ தாகவும் அவர் கூறினார்.