சென்னை: 

ஜினியின் ஆன்மிக அரசியல் என்பது என்ன என்று பலரும் குழம்பி வரும் வேளையில், இது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்த ரஜினி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறித்தார்.

மேலும், தான் செய்யப்போவது “ஆன்மிக அரசியல்” என்றும் அறிவித்தார்.

ரஜினியின் பல அறிவிப்புகளைப்போலவே இதுவும் பலரால் விவாதிக்கப்பட்டது. “ஆன்மிக அரசியல்” என்றால் என்ன என்று புரியவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நடந்த “துக்ளக்” வார இதழின் 48வது ஆண்டுவிழாவில் பேசிய அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, “ரஜினியின் ஆன்மிக அரசியல்” குறித்து விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, “அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வால் இளைஞர்களை ஈர்க்கவே இயலாது. ஆகவே அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் மாற்றம் ஏற்படும். தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.  கழகங்களுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க ரஜினி வகுத்த செயல் வியூகம் தான் ஆன்மீக அரசியல்.

அவரும், பா.ஜ.,வும் இணைந்து செயல்பட்டால்  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்” என்று  ஆன்மிக அரசியலுக்கு விளக்கம் அளித்தார்.