சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன்
இந்திய நீதித்துறை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை… இது கவலைக்குரிய நிகழ்ச்சிப் போக்கு… நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளே இப்படி முரண்பாடுகளுடன் இருப்பார்களானால் அவர்களால் ஒத்த கருத்துடன் தீர்ப்பளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுமா… வேறு எத்தனையோ வழிகள் இருக்க இப்படி ஊடகங்களை அழைத்துப் பேசியது நியாயம்தானா… எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தலைமை நீதிபதியின் அதிகாரம் என்கிறபோது அதில் ஊழல் நோக்கம் இருக்கும் என்ற ஐயப்பாட்டை எழுப்பலாமா…
உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலாமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லொக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் ஜன.12 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அணுகுமுறைகள் பற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள். அண்மைக்காலமாக நீதிமன்றத்திற்குள் நிகழ்பவை சரியில்லை, அவை நீதிமன்ற அமைப்பையே கேள்விக்கு உட்படுத்தும் வகையில் இருக்கின்றன என்று கூறினார்கள். தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நிலையில் இருப்பவர்களான, இவர்களில் ஒருவர் அடுத்த தலைமை நீதிபதிகயாகக்கூட வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறவர்களான இந்த நான்கு பேரும் தங்களின் மனக்குமுறலை வெளியே கொட்டியிருக்கிறார்கள். அதையொட்டியே மேற்படி கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன.
நீதிபதிகளுக்கிடையே முரண்பாடுகள் வெளிப்படுவதுண்டு. ஆனாலும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அவை தீர்க்கப்படும், தீர்வில்லாமலும் தொடரும். நாட்டின் நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நான்கு நீதிபதிகள், அதுவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதிலேயும் தற்போது பதவியில் உள்ள நீதிபதிகள் இவ்வாறு வெளிப்பட்டது, நீதித்துறையின் ஒழுங்கமைப்பையே சிதைத்துவிடும் என்ற கோணத்திலும், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
முதலில், எது ஒன்றுமே ஏற்கெனவே எப்படியெப்படி நடந்து வருகிறதோ அப்படியப்படியேதான் தொடர வேண்டும் என்ற கட்டாயமில்லை. முன்னெப்போதும் நடந்ததில்லை என்பதற்காகப் புதிதாக ஒன்று நிகழவே கூடாது என்று கட்டளையிடுவதற்கில்லை. அப்படியொரு புதிய நிகழ்வால் ஏற்படும் சலசலப்பு கண்டு பதறவோ கவலையுறவோ வேண்டிடயதில்லை. காலமும் வரலாறும் ஏற்கெனவே நிகழ்ந்து வருவதை மட்டுமே நகலெடுத்துக்கொண்டிருப்பதில்லை. அப்படி மாற்றமே இல்லாமல் நகலெடுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்றால், இன்றைய நீதித்துறை கட்டமைப்பே கூட உலகில் உருவாகியிருக்காது. பழைய அரண்மனைக் கொலுமண்டப விசாரணைகளும் அரச மரத்தடி நாட்டாமைகளும்தான் தொடர்ந்திருக்கும்.
அடுத்து, நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடுகளே வரக்கூடாது, ஒத்த கருத்தோடுதான் செயல்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை. சொல்லப்போனால் கருத்து வேறுபாடுகள்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஒத்த கருத்து என்ற பெயரில் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தவே கூடாது என்றால், அது நியாயங்கள் ஒடுக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும். ஆகவேதான், உயர்நீதிமன்றம், அதற்கும் மேலான உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளின் அமர்வுக் குழுக்களில், ஒவ்வொருவரும் தனது மாறுபட்ட கருத்தை எழுத்துப்பூர்வமாகவே பதிவு செய்யும் சுதந்திரத்தை நாட்டின் அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிறது. பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பான ஏற்பாடாகும்.
இந்தக் குறிப்பிட்ட பிரச்சனையில், வேறு வழிகளை அவர்கள் நாடவே இல்லை எப்படிச் சொல்ல முடியும்? ஏற்கெனவே தலைமை நீதிபதிக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு சரியான எதிர்வினை அவரிடமிருந்து வரவில்லை என்று கூறுகிறார்கள். அதைத் தவிர வேறு வழிமுறைகளை அவர்கள் நாடவில்லை என்று நாம் வெளியேயிருந்து சொல்ல முடியுமா? ஊடகங்களைச் சந்தித்ததால் இது பரபரப்புச் செய்தியாகியிருக்கிறது. நீதிமன்றத்திற்குள் அவர்கள் வேறு என்ன வழிகளைக் கையாண்டார்களா இல்லையா என்பதற்கு செய்தி ஆதாரம் எதுவும் நம்மிடம் இல்லை.
வழியே இல்லாத நிலையில்தான், இதன் தாக்கங்கள் பற்றிய முன்னுணர்வோடுதான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என ஊகிப்பது கடினமல்ல. மாற்றுக் கருத்துகளையும் சுதந்திரமான செயல்பாட்டையும் தடுத்துச் சுவர் எழுப்பப்படுமானால், அது எந்த இடமானாலும் அங்கே குமுறல்கள் பொங்கி வெடிப்பது நடந்தே தீரும். அப்போது சுவரில் விரிசல் விழத்தான் செய்யும். அந்த விரிசல் வழியாக வெளிச்சக்கீற்று வரும். ஜனநாயகத்தின் மையமே, பிரச்சனையை மக்களிடம் கொண்டுசெல்வதுதான். ஊடகங்களைச் சந்திப்பது மக்களிடம் கொண்டுசெல்வதற்காகத்தான். அதனால்தான் இப்போது, தலைமை நீதிபதி – எதிர் – நான்கு நீதிபதிகள் என்ற செய்தியோடு நில்லாமல், நீதித்துறை அமைப்பு, அதன் உண்மையான சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவையும் நாடு தழுவிய விவாதப் பொருளாகியிருக்கின்றன. சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் மட்டுமல்லாமல், தேநீர்க் கடை வாடிக்கையாளர்களும் விவாதிக்கிறார்கள் என்பது ஆரோக்கியமான வளர்ச்சியே.
தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்ட அந்த நால்வர் குழுவினர், “எதுவும் சரியாக இல்லை என்பதைப் பல முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். ஆனால் ஒரு பயனும் இல்லை. ஆகவே நாட்டிற்குச் சொல்லிவிடுவது என்று முடிவு செய்தோம். எனவேதான் இந்த அசாதாரணமான முடிவை (செய்தியாளர்களைச் சந்திக்கும் முடிவு) எடுத்தோம். இருபது ஆண்டுகள் கழித்து நாடு எங்களை, ஆன்மாவை விற்றுவிட்டவர்கள் என்று சொல்லக்கூடாது,” என்று கூறியதை நீதிமன்றமும் அரசும் நாடாளுமன்றமும் சமுதாயமும் ஆழ்ந்த அக்கறையோடு ஆராயத்தான் வேண்டும்.
“தலைமை நீதிபதி என்பவர் சம மதிப்புள்ள நீதிபதிகளில் முதன்மையானவர் மட்டுமே, அதற்குக் கொஞ்சமும் மேலானவரும் அல்ல, கீழானவரும் அல்ல என்பது நிலைநாட்டப்பட்டிருக்கிறது,” என்று அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர். முக்கியமான வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் எந்த நீதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும் என்பதைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக முடிவு செய்கிறார்; குறிப்பான காரணம் எதுவுமில்லாமல் அந்த வழக்குகளைத் தேர்ந்தெடுத்த சிலரிடமே விடுகிறார் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். சில வழக்குகளை ஒப்படைத்த நீதிபதிகள் குழுவிடமிருந்து இடையிலேயே வேறு குழுவுக்கு மாற்றுகிறார் என்று கூறப்படுவதை வெறும் அதிகாரச் சண்டை என்று தள்ளிவிட முடியுமா?
பாஜக தலைவர் அமித் ஷா மீதும் புகார் உள்ள, குஜராத்தின் சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.எச். லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். “அது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் யார் விசாரிக்க வேண்டும் என்பதைத் தலைமை நீதிபதி முடிவு செய்தது பற்றிச் சொல்கிறீர்களா,” என்று செய்தியாளர்கள் கேட்டபோது “ஆம்” என்று அவர்கள் பதிலளித்துள்ளனர். நீதிபதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பது தொடர்பாகவும் அவர் இவ்வாறு செயல்பட்டதாக நீதிமன்ற வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அந்த வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான விரிவடைந்த குழு விசாரிக்கும் என நீதிபதி செலாமேஸ்வர் தலைமையிலான அமர்வு ஆணையிட்டதை, தீபக் மிஸ்ரா மாற்றினார். அந்த வழக்கில் அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாலேயே அவர் இவ்வாறு செயல்பட்டார் என்ற விமர்சனம் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் மீதான கைது, சிறைத்தண்டனை தொடர்பாகத் தாங்கள் தெரிவித்த ஆலோசனை ஏற்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்படிப்பட்ட வழக்குகளை அவர் கையாண்டது நிச்சயமாகக் கண்களைச் சந்தேகத்துடன் சுருக்கிப் பார்க்க வைத்திருக்கிறது.
தலைமை நீதிபதியாவதற்கு முன்பு, தேசப்பற்றை வளர்க்கத் திரையரங்குகளில் தேசியகீதம் காட்டப்பட வேண்டும், படம் பார்க்க வந்த ரசிகர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று ஆணையிட்டவர் அவர்தான். மக்கள் தங்கள் தேசப்பற்றை நெற்றியில் ஒட்டிக் காட்டிக்கொண்டு வர வேண்டுமா என்று கேட்கிற, தேசப்பற்று என்பது தேசத்தின் மக்களைப் பாகுபாடின்றி நேசிப்பதா அல்லது கொடிக்கு வணக்கம் செலுத்துவதா என்றும் மானுடப் பற்றாளர்கள் அப்போதே வினவினார்கள். அவர்களின் குரலை, தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியானதற்குப் பின் அவரது தலைமையிலான அமர்வில் இடம் பெற்ற மற்றொரு மூத்த நீதிபதி சந்திரசூட் கடந்த அக்டோபரில் எதிரொலித்தார்.
அயோத்தி வழக்கை மத்திய ஆளுங்கட்சியினர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மத உணர்வைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தக்கூடும் என்ற கவலையோடு, அந்த வழக்கை 2019க்குத் தள்ளிவைக்க மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், ராஜிவ் தாவன், தாவே ஆகியோர் கோரினர். வாதத்தின்போது அவர்கள் தங்கள் குரலை உயர்த்திப் பேச வேண்டியிருந்தது. அதை ஒரு பெருங்குற்றமாகச் சாடியவர் தீபக் மிஸ்ரா. இது மூத்த வழக்குரைஞர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கான தகுதி இருக்கிறதா என்பதைக் காட்டுகிறது என்று வெப்பம் மிகுந்த சொற்களை அமைதியாகச் சொன்னார் அவர்.
தில்லி மாநில அரசு – எதிர் – துணைநிலை ஆளுநர் வழக்கில் வாதாடிய ராஜிவ் தாவன், இதே போன்ற சொற்களால் நொந்துபோனவராக, இனி வழக்குரைஞர் தொழிலையே தொடரப் போவதில்லை என்று, வழக்குரைஞர் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முடிவை அறிவித்தார். “மூத்த வழக்குரைஞர் என்ற அங்கியைக் கழற்றி வைத்துவிடுகிறேன். ஆனால் ஒரு ஞாபகத்துக்காக அதை வீட்டில் வைத்துக்கொள்கிறேன்,” என்று அவர் சொன்னது ஒரு கூர்மையான விமர்சனம் அல்லவா?
தலைமை நீதிபதி நியமனச் செய்திகள் வருகிறபோது விமர்சனங்களும் வந்திருக்கின்றன. ஆனால், தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டபோது எதிர்ப்பே கிளம்பியது என வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பலர் மனதுக்குள் ஆயிரம் விமர்சனங்களோடு இருந்தாலும் வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள். ஆட்சியாளர்களையும் இதர அரசியல்வாதிகளையும் விமர்சித்தால் அவதூறு வழக்குகள் ஏவிவிடப்படுவது போல, நீதிபதிகளை விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பாயலாம் என்ற அவர்களது அச்சம் பொருளற்றதல்ல. சமூகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், வழக்கின் எல்லையைத் தாண்டி போராடுகிறவர்களை அவமதிக்கும் கருத்துகளை வெளியிடுகிறார்கள், அதை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்ககளில் விமர்சிக்கிறவர்களுக்குக் காவல்துறை விசாரிப்புக்கான ஆணை போகிறதே! விமர்சனங்களைத் தாங்கிடும் பக்குவத்தை அரசுக்கு எடுத்துரைக்க வேண்டிய நீதிபதிகளே இப்படிப் பொறுமை இழக்கலாமா?
குறிப்பிட்ட வழக்குகளைக் குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் ஊழல் நோக்கம் இருப்பதாகச் சொல்ல முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். நீதித்துறையில் லஞ்சம் இருக்கிறதா என்று நேரடியாகவும் கேட்கப்படுகிறது. காற்றைப் போல எங்கும் பரவியிருக்கிற ஊழல் நீதித்துறையிலும்
ஊழல் என்றால், சாதகமான தீர்ப்புக்காகப் பண வடிவில் கொடுக்கப்படும் லஞ்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மாநில ஆளுநர் பதவி, விசாரணை ஆணையத் தலைமைப் பதவி, முக்கிய நிறுவனங்களின் தலைவர் பதவி என, காலங்காலமாய் இருந்து வருகிற பதவி ஓய்வுக்குப் பிந்தைய கவனிப்புகளை வேறு எந்த வகையில் சேர்ப்பது?
ஆகவேதான், நீதிபதிகள் பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர்களை ஏதேனும் விசாரணைக் ஆணையத்திற்குத் தலைவராக நியமிப்பது உள்ளிட்ட பதவி ஏற்பாடுகள் இருக்கக்கூடாது, பதவியில் உள்ள நீதிபதிகள்தான் விசாரணை ஆணையத் தலைவர்களாகவும் இருக்க வேண்டும், இது ஊழலைத் தடுக்கும் திசையில் முக்கியமானதொரு நடவடிக்கையாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் விதிவிலக்கான சிலரைத் தவிர இந்நாள்/முந்நாள் நீதிபதிகள் இதை ஆதரித்ததில்லை. ஆட்சியாளர்களுக்கும், அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை எழுதுகிற ஆணையத் தலைவர்கள் தேவைப்படுவதால், இந்த நியமன ஏற்பாட்டை மாற்றுவதற்கு முன்வந்ததில்லை.
நீதித்துறையின் சுதந்திரமும், ஒருமைப்பாடும் குறுக்கீடுகளுக்கு உள்ளாவது பற்றிய முழுமையான விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்தக் கோரிக்கை ஏற்கப்படுமா? அந்த விசாரணையை நீதிமன்றம் தானாகவே மேற்கொள்ளுமா? அல்லது, அரசுக்கும் நீதிமன்றத்திற்குமான சட்டங்களை இயற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றம் மேற்கொள்ளுமா? அடுத்தடுத்த வரப்போகிற நிகழ்வுகளைக் கவனிப்போம். இந்த நிகழ்வுகளின் பின்னால் உள்ள மற்றொரு பிரச்சனையை மட்டும் இங்கே பார்ப்போம்.
தேசிய அளவில் நீதித்துறையின் உயர்ந்த அமைப்பாகிய உச்சநீதிமன்றத்திற்கும், மாநில அளவில் உயர்ந்த அமைப்பாகிய உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதிகள் நியமிக்கப்படுவது தொடர்பாக அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே ஒரு மோதல் இருந்து வருகிறது. நீதிபதிகளே அதை முடிவு செய்கிற தற்போதைய கொலீஜியம் (குழு) ஏற்பாடே தொடர வேண்டும் என்கிறார்கள் பல நீதிபதிகள். அதில் தனக்கும் பங்கிருக்க வேண்டும், அதற்காக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கலாம், அதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெறலாம் என்கிறது மத்திய அரசு.
ஆனால், தேவைப்படுவது மேற்படி குழுவோ, நியமன ஆணையமோ அல்ல, தேசிய நீதித்துறை ஆணையம்தான். நீதிபதிகள் தேர்வு, நியமனம், நீதித்துறை சார்ந்த ஊழல் புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்த நேர்மையான விசாரணை மேற்கொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளதாக அந்த தேசிய நீதித்துறை ஆணையம் இருக்க வேண்டும். அந்த ஆணையம் நீதித்துறையினர், அரசினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், சமூக அக்கறையாளர்கள் என விரிந்ததொரு ஜனநாயகப் பூர்வ அமைப்பாக இருக்க வேண்டும் என்று இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், மனித உரிமைப் போராளிகள், சட்ட ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
புரையோடிப்போயிருக்கும் பிரச்சனைகளுக்கு இது முழுமையான தீர்வாகிவிடாதுதான். ஆனால் ஒப்பீட்டளவில் உடனடியான, உறுதியான, நம்பிக்கைக்குரிய வழியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால்தானோ என்னவோ சம்பந்தப்பட்டவர்கள் இந்த வழி பற்றி ஆராயத் தயாராக இல்லை!
தொடரும் நாடு தழுவிய விவாதங்கள் இதையும் முன்வைக்குமானால் ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகத்தில் எந்தத் துறையுமே மக்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது – நீதித்துறை உட்பட.