போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முழு அளவில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன.
ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த நான்காம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த போராட்டம் நேற்று எட்டாம் நாளாக நீடித்தது. பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். .
இதற்கிடையே, வேலைநிறுத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை கடந்த ஐந்தாம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போராட்டத்துக்கு தடை விதித்ததோடு, உடனடியாக பணிக்கு திரும்புமாறு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழிற்சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு நடுவரை நியமித்து இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பொதுமக்களின் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தது.
இதையடுத்து, இன்று முதல் பணிக்கு திரும்ப போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்தன.
வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த ஊழியர்கள் இன்று பணிக்குத் திரும்பினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் வழக்கம் போல் இயங்கத்துவங்கின.
முக்கிய தகவல்:
“காலதாமதம் காரணமாக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை. சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக பயணிகள் செல்லலாம் அண்ணாநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, தாம்பரம் சானிடோரியம், வண்டலூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்” என்று -போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.