ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் காசர் நகரில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு தொலைக்காட்சி செய்தியாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் காசர் நகரில் உள்ள 8 வயது சிறுமி ஜைனப் அன்சாரி காணாமல் போய் உள்ளார்.  அவரது பெற்றோர்கள் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர்.    அந்த சிறுமியின் உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.   பல இடங்களிலும் அந்த சிறுமியை தேடிய போது அந்த சிறுமி ஒரு குப்பை மேட்டில் பிணமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார்.  பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி உள்ளனர்.  அப்போது காவல் துறை துப்பாக்கி சூடு நிகழ்த்தியதில் இருவர் மரணம் அடைந்துள்ளனர்.    இது குறித்து சாமா டிவி என்னும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் கிரண் நாஸ் என்பவர் தனது குழந்தையுடன் தொலைக்காட்சியில் தோன்றி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது கிரண் நாஸ், “நான் இன்று செய்தியாளர் கிரண் நாஸ் ஆக உங்கள் முன் வரவில்லை.   ஒரு தாயாக வந்துள்ளேன்.  அதனால் என் மகளுடன் இங்கு வந்துள்ளேன்.      ஒரு சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை ஒரு தாயாக என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.   அந்த குழந்தையின் சடலம் காசர் நகரில் கிடைத்துள்ளது.  ஆனால் அதன் தாக்கம் பாகிஸ்தான் முழுவதும் பரவி உள்ளது.

மனிதத் தன்மையை கல்லறைக்கு அனுப்பியது இன்று என நான் உணர்கிறேன்.    இதில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.  அதன் மூலம் ஜைனப் அன்சாரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.  நீதி நிலை நாட்டப் பட வேண்டும்” எனகூறி உள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=KrnBJa39Mq4]