சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் ஆலோசகராகவும், தமிழக முன்னாள் தலைமை செயலாளராகவும்  இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன்று மீண்டும்  ஆஜராகி  உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இந்த ஆணையம்  கடந்த நவம்பர் மாதம் தனது விசாரணையை தொடங்கியது.

ஜெயலலிதா மரணம் குறித்து பலர் விசாரணை ஆணையத்தில்  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும்,  முப்பதுக்கும்  அதிகமானவர்கள் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட ஜெயலலிதா மரணம் தொடர்பான 302 புகார்கள் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர தபால் மூலம் மேலும் 120 புகார்கள் குவிந்துள்ளன.

இந்நிலையில், ஜெ. மரணம் குறித்து மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் மற்றும் தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன் ராவ் மற்றும், பல அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உள்பட சசிகலா உறவினர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 20ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக கடந்த 5ந்தேதி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.

அதைத்தொடர்ந்து இன்று மீண்டும் ஷீலா பாலகிருஷ்ணன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.