டில்லி,
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய டில்லி குர்கானில் உள்ள ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்குகில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11-ம் வகுப்பு மாணவனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தலைநகர் டில்லியின் குர்கான் பகுதியில் ரியான் எனப்படும் சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ந்தேதி பள்ளியின் கழிப்பிடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கொலை சம்பவத்தை விசாரித்து வந்த அந்த பகுதி போலீசார், அந்த சிறுவன் பள்ளிக்கு வரும் வாகனத்தின் நடத்துனர் பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக குற்றம் சாட்டினர். ஆனால் அவர் மறுத்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக அதே பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மாணவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், அந்த மாணவன் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குருகிராம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான வழக்கு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, குற்றவாளியான 11-ம் வகுப்பு மாணவனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக குருகிராம் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.