ஐதராபாத்
ஐதராபாத் நகர மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டைபாய்ட் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது.
உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் டைபாய்ட் காய்ச்சலால் பாதிப்பு அடைகின்றனர். இந்தக் காய்ச்சல் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கி வருகின்றது. இதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வி கெடுவதுடன், பணி புரிவோருக்கும் விடுமுறை எடுக்க வேண்டி வருவதால் ஊதிய இழப்பு ஏற்படுகின்றது. அது மட்டுமின்றி குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் கடும் பக்க விளைவை டைபாய்ட் உண்டாக்குகிறது.
இதற்கு தடுப்பு மருந்தாக உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை அங்கீகரித்து இருந்தது, தற்போது இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் உள்ள பாரத் பயோ டெக் என்னும் நிறுவனம் டைபாய்ட் கான்சுகேட் வாசின் என்னும் தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ஊசி வடிவில் வருகிறது. இந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த தடுப்பூசி ஆறு மாதக் குழந்தைகள் முதல் வயதானவர் வரை உபயோகப்படுத்தலாம் எனவும் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 முதல் இந்த தடுப்பூசி பல நிலைகளில் பரிசோதிக்கப்பட்டு தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம் இனி இந்த தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் உபயோகப் படுத்த முடியும். இதன் மூலம் டைபாய்ட் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.