சென்னை
2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “தீர்ப்பை தீர்ப்பாக பார்க்க வேண்டும்” என்று திரும்பத்  திரும்ப கூறினார்.

2 ஜி வழக்கின் தீர்ப்புக் குறித்து  தமிழிசை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

“2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ராசா உள்ளிட்டவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”தீர்ப்பை தீர்பாக பார்க்க வேண்டும். இதுதான் என் பார்வை!”

“அதாவது..?”

”அதாவது.. இதற்கு முன் இதே 2ஜி வழக்கில் குற்றம் இருந்தது என்று கூறப்பட்டது. அதற்காக தண்டனையும் அடைந்து சிறையிலும் இருந்திருக்கிறார்கள்!”

“இல்லை… தண்டனை தரப்படவில்லை. விசாரணையின் இடையில், சிறையில் இருந்தார்கள்!”

“அது எனக்கும் தெரியும்பா..! அதாவது, முன்பு குற்றம் சாட்டப்பட்டார்கள்.. முன்பு சிறையில் இருந்தார்கள் என்று சொன்னேன். ஆகவே இந்தத் தீர்ப்பை வைத்து எதையும் சொல்ல முடியாது.”

“அமித்ஷா மீதும் இப்படித்தான் குற்றம் சாட்டப்பட்டது. பிறகு விடுதலை ஆனார். அதே போல கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையையும் ஏற்றுக்கொள்கிறீர்களா..இதனால் உங்கள் அரசியல் பார்வை மாறுமா..”

“இந்த ஒரு தீர்ப்பில் இப்படி தீர்ப்பு வந்திருக்கிறது. இதற்கு மேல் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது பற்றிய பார்வை மாறும். மற்றபடி தீர்ப்பை தீர்ப்பாக பார்க்கிறேன். தனிப்பட்ட எந்த கருத்தோ கருத்து மாறுபாடோ கிடையாது..”

“2016ல் 2ஜி ஊழல் என்று சொல்லித்தான் பாஜக ஓட்டு கேட்டது. அதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் குஷ்பு தெரிவித்திருக்கிறாரே..”

“சி.ஏ.ஜி.தான் குற்றச்சாட்டு வைத்தார்கள். அவர்கள் மன்னிப்பு கேட்கணுமா..? காங்கிரஸில் ஊழலே நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. தீர்ப்பை தீர்ப்பாக பார்க்கணும்!” – இவ்வாறு தமிழிசை பதில் அளித்தார்.