டில்லி,
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முதன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
நாடாளுமன்ற வாயிற் பகுதியில் உள்ள உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எப்ஆர்டிஐ ( FRDI) எனப்படும் வங்கி தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்புறுதி மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
வங்கி தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு வரைவு மசோதா (எப்ஆர்டிஐ) நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது.
இதில் உள்ள ஒரு விதிமுறை, ‘வங்கிகள் திவால் நிலைக்கு சென்றால், வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தை பயன்படுத்தி திவால் பிரச்னைக்கு தீர்வு காண இந்த மசோதா வழி வகுக்கிறது’ என நிபுணர்கள் சிலர் கருத்து கூறினர்.
இதனால், இந்த விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 90வது ஆண்டு பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி,
வங்கி வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கத்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, ஆனால், நிதி தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு மசோதா குறித்து தவறாக வதந்தி பரப்பப்படுகிறது’’ என கூறியிருந்தார்.