டில்லி

குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் வெற்றி பெற்றதால் மோடியின் சர்வாதிகாரம் அதிகமாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார்.

நேற்று வெளியான குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச சட்ட சபை தேர்தல் முடிவுகளின் படி இரு மாநிலங்களிலும் பாஜக அரசு அமைக்க உள்ளது.   இமாசலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் குஜராத் மாநிலத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  பாஜகவின் வெற்றி குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, “குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜகவை மதச் சார்பற்ற சக்திகளால் வெல்ல முடியாதது வருத்தம் கொடுக்கிறது.    எனவே இனி வரும் தேர்தல்களில் மதவாத சக்திகளுக்கு எதிராக போராட பாஜக வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகலும் இணைய வேண்டிய அவசியம் உண்டாகி உள்ளது.

இந்த தேர்தல் வெற்றிகளால் மோடியின் சர்வாதிகாரம் மேலும் அதிகமாகும்.   அது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை.   மேலும் பாஜக தனது இந்துத்வ கொள்கைகளை அமுல் படுத்துவதில் இன்னும் தீவிரம் காட்டும்.  மதச் சார்பற்ற சக்திகள் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.