சென்னை:
வடசென்னை போலீஸ் இணை ஆணையராக பிரேம்ஆனந்த் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது. பணம் கொடுப்பவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் வடசென்னை இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு பதிலாக போக்குவரத்து இணை ஆணையராக இருந்த பிரேம்ஆனந்த் சின்ஹாவை வடசென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், 2001-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மாநில இயக்குநராக சிறப்பாக செயல்பட்ட அவர் தற்போது போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.