அகமதாபாத்,
குஜராத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் முன்பைவிட தற்போது அதிக பலம் பெற்றுள்ளது. இது இந்த தேர்தல் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தீவிர பிரசாரத்துக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், கடந்த முறையை விட அதிக வாக்குகள் பெற்றிருப்பது காங்கிரசாருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறியதாவது, குஜராத்தில் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு, ராகுல்காந்தியின் அசாத்திய பிரசாரத்துக்கு கிடைத்த ‘வெற்றி’யாகவே பார்க்கிறோம் என்று கூறி உள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் பிரசார யுத்தி மற்றும் ராகுல் காந்தி செய்த பஸ் பயணங்கள் போன்றவை மாநில மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் சரி, ஆனால் இது காங்கிரசின் வெற்றியாகத்தான் இதை நாடு பார்க்கிறது என்று கூறி உள்ளார்.
மேலும், தங்களது கட்சியின் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை மூலம் குஜராத் மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெற்றிக்கரமாக பிரதிபலித்துள்ளோம். அதில் நாங்கள் வெற்றி பெற்றதாகவே நம்புகிறோம் என்றும் கூறி உள்ளார்.
ஆனால், மோடியோ, மண்ணின் மைந்தன் என்ற விவகாரத்தை முன்வைத்து பிரசாரம் செய்தது. இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்து பிரசாரம் செய்வது காங்கிரஸ் கட்சியின் பண்பாடு அல்ல. ராகுல் காந்தியும் பிரதமருக்கு எதிராக எந்த வொரு விமர்சனங்களையும் முன்வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். சோனியா, ராகுல் மற்றும் மன்மோகன் குறித்து அவர்கள் முன்வைத்தது போன்ற விமர்சனங்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
அசோக் கெலாட் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் முக்கிய முடிவுகள் எடுத்தபோது அவர்களுக்கு துணை நின்றவர். தற்போது ராகுலுக்கும் தேர்தல் பிரசார வியூகங்கள் கொடுத்துவருகிறார்.