மேட்டூர்,
மேட்டூர் அணையில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபாக பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் மணிகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் மோகன்ராஜ், தனபால் என்பவரின் மகன் ராஜா, மற்றும் தமிழ் அழகன் ஆகிய 4 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 4 பேரும் மேட்டூர் கேம்ப் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் திடீரென மாயமானார்கள். சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
ஆனால் அவர்கள் குறித்து எந்தவித தகவலும் தெரியாததார், கிராம மக்கள் சேர்ந்து அந்த பகுதி மலைகளிலும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் சிறுவர்கள் 4 பேரின் உடல்களும் மிதந்துள்ளது. இதை கண்ட ஒருவர் தீயணைப்பு துறைக்கும், சிறுவர்களின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள் மோகன்ராஜ், மணிகண்டன், சகோதரர்கள் ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் உடலை மீட்டனர்.
இவர்களில், ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். உயிரிழந்த மாணவன் ராஜா 6-ம் வகுப்பும், தமிழ் அழகன் 4-ம் வகுப்பும், மோகன்ராஜ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இதில் மோகன்ராஜ் சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டி மாலை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 மாணவர்களின் உடல்களையும் மேட்டூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை வளாகத்திலும் கேம்ப் பகுதி மக்கள் கூடினர். அங்கு அழுகுரலாக இருப்பதால் மருத்துவமனை வளாகமும் சோகமாயமாக காணப்படுகிறது.
மாணவர்கள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. அவர்கள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது 4 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கம் என்றும் கூறப்படுகிறது.