ஐதராபாத்
தெலுங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பவர்கள் அரசுக்கு தகவல் அளித்தால் ரூ. 500 பரிசு வழங்கப்படும் என் அரசு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் முன்பு துவங்கி அதன் பின் சிறிது காலத்தில் சிறிது மந்தமானது. தற்போது மீண்டும் இந்த திட்டத்தை மாநில அரசு துவக்கி உள்ளது. பிச்சைக்காரர்களை மீட்டு ஐதராபாத் நகரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கும் அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தெலுங்கானாவில் பிச்சைக்காரர்களே இல்லாத ஒரு நிலை வரும் வரை இந்தப் பணியை தொடர்ந்து செய்யப்போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சுமார் 316 ஆண் பிச்சைக்காரர்களும், 164 பெண் பிச்சைக்காரிகளும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 261 ஆண்களும் 140 பெண்களும் பிச்சை எடுப்பதை முழுவதுமாக நிறுத்தி விடுவதாக அரசுக்கு உத்திரவாதம் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை அரசு தேவையான மருத்துவ உதவிகளுக்குப் பின் விடுவித்துள்ளது. வரும் 20 ஆம் தேதிக்குள் ஐதராபாத் நகர் அளவில் பிச்சைக்காரர்களே இல்லாத நகரமாக மாறி விடும் என இத்திட்டத்தின் பொது இயக்குனர் கூறி உள்ளார்.
வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் அரசு ஒரு புதிய திட்டம் கொண்டு வர உள்ளது. அதன்படி மீண்டும் பிச்சைக்காரர்களை மாநிலத்தின் எந்தப் பகுதியில் பார்த்தாலும் உடனடியாக அரசுக்கு இதற்கான பிரத்யேக தொலைபேசி எண்கள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு அறிக்கை அளிக்க உள்ளது. அவ்வாறு தகவல் அளிப்போருக்கு ரூ. 500 பரிசு அளிக்கப்படும். பிச்சை எடுக்க மாட்டேன் என உறுதி மொழி கொடுத்து விட்டு அதை மீறும் பிச்சைக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் தெலுங்கான அரசு அறிவித்துள்ளது..