டில்லி:
‘‘அமைச்சர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ மத்திய, மாநில அமைச்சர் பதவிக்கு குறைந்தபட்ச வயதை 25ல் இருந்து 35ஆக உயர்த்த வேண்டும். அதேபோல் அமைச்சராக பதவி ஏற்க குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்.
எம்எல்ஏ.வாக போட்டியிடுவதற்கு அடிப்படை கல்வி தேவை என்பது விவாதத்துக்குறிய விஷயமாகும். படிக்காத அறிவாளி அரசியல்வாதிகளும், படித்த முட்டாள் அரசியல்வாதிகளும் இங்கு உள்ளனர். கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமை அடைய செய்யாது.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ஆனால், அமைச்சர்களுக்கு அப்படி இல்லை. அவர்களுக்கு என்று சில அடிப்படை கல்வியறிவு இருக்க வேண்டும். அவர்கள் கோப்புகளை பார்த்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை இருப்பதால் கல்வி அறிவு அவசியம். அது பட்டப்படிப்போது அல்லது அதற்கு சமமான படிப்பாகவோ இருக்கலாம்.
அமைச்சராக இருக்க கூடியவருக்கு மன முதிர்ச்சி இருக்க வேண்டும். வெறும் கல்வி அறிவு மட்டும் போதுமானது கிடையாது. அதனால் வயது வரம்பை 35 என மாற்றி அமைக்க வேண்டும். சில அமைச்சர்களும், எம்எல்ஏ.க்களும் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. அதனால் அமைச்சர்களுக்கு அதிக பொறுப்பு கட்டாயம் இருக்க வேண்டும்’’ என்றார்
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘எம்எல்ஏ.வை திரும்ப பெறும் நடைமுறை அவரது மொத்த பதவி காலத்தில் இரண்டரை ஆண்டு காலம் கடந்த பின்னர் அமல்படுத்தலாம். 5 ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகளில் அவரது செயல்பாடு திருப்தி இல்லை என்றாலோ? அல்லது அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ? அந்த சமயங்களில் திரும்ப பெறும் சரத்து இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.க்களின் செயல்பாடு மேம்பட வாய்ப்பு உருவாகும். ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடும் நடைமுறையை ஏற்க முடியாது என்று 2014ம் ஆண்டு பிரதமருக்கு கடிதம் எழுதினேன்’’ என்றார்.