சென்னை

செல்வி என்னும் பெண்ணிடம் இருந்து ஆர் கே நகர் தொகுதியில் ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு தொகுதி எங்கும் பண பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளன.   இது குறித்து அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி பத்ரா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் செல்வி என்பவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.    அவர் தினகரன் ஆதரவாகப் பணப் பட்டுவாடா செய்ய ரொக்கத்துடன் வந்ததாக கூறப்படுகிறது..    அவருடன் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, “செல்வி என்பவர் எங்கள் வாக்குச் சாவடி முகவர் மட்டுமே.   அவரை ரூ. 20 லட்சம் வைத்திருந்ததாக பொய்ப் புகார் கூறி கைது செய்துள்ளனர்.   அவர் ரூ. 10000 வைத்திருந்திருப்பார்.   ஒரு பூத் ஏஜண்ட் தன் கைச்செலவுக்கு ரூ. 10000 வைத்திருப்பது கூட குற்றமா?  இது தினகரனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்க ஆளும் கட்சி செய்யும் சதிகளில் ஒன்று” எனக் கூறி உள்ளார்.