சென்னை:

ரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான்.  ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆய்வு செய்தார்.  அரசு அதிகாரிகளுடன்  ஆலோசனை  நடத்தினார்.

“இது ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. மாநில சுயாட்சிக்கு எதிரானது” என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கடலூரில் ஆய்வு நடத்திய ஆளுநர் அங்கிருந்த கீற்று மறைப்பில் குளித்து கொண்டிருந்த பெண்ணை பார்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது.

மேலும் கடலூரில் இருந்து சென்னை  வந்த போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் மூவர் பலியானார்கள்.

இந்த சம்பவங்களை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளதுள்ள போதிலும், விமர்சனங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர்  ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர் மட்டுமே. அரசு நிர்வாகத்தை பொருத்தவரை ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே. ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசை கண்டு முதல்வர் அஞ்சுவதால்தான் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார்” என்று  தெரிவித்துள்ளார்.