டில்லி:

‘‘ரேபரலி தொகுதியில் சோனியாகாந்தி மீண்டும் போட்டியிடுவார்’’ என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றார். டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காகாந்தி தனது கணவருடன் பங்கேற்றார்.

அப்போது, ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரியங்கா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ரேபரலி தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேன் என்ற கேள்விக்கே இடமில்லை. எனது தாயார் சோனியா காந்தி தான் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார். நான் பார்த்ததிலேயே மிகவும் துணிச்சலான பெண் எனது தாயார் தான்” என்றார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக சோனியா காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரேபரலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடவுள்ளார் என்று சில தினங்களாக பேச்சுக்கள் அடிபட்டது. இதை தொடர்ந்தே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரியங்கா இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

ராகுல் தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து சோனியா அரசியலல் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிடப்போவதாக பரவிய செய்திக்கு பிரியங்காவின் பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது