டில்லி:

பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த 42 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரூ.5.05 லட்சம் கோடியாக உயர்ந்தது குறித்த விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயாராக இருக்கிறாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் குஜராத் மாநில பொறுப்பாளர் அசோக் கெலாத் மற்றும் காங்கிரஸ் தொடர்பியல் பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 3.5 ஆண்டுகளாக பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு உயர்ந்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படாத சொத்துக்களின் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் உயர் ந்தது எப்படி? என்று பதிலளிக்க வேண்டும். தனிப்பட்ட விசாரணையை, தனி முகமை மூலம் மேற்கொள்ள வேண்டும். செயல்படாத சொத்துக்களின் மதிப்பு உயர்ந்ததற்கும், வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை யார் எடுத்துச் சென்றார்கள்? என்பதையும் பிரதமர் விளக்க வேண்டும்’’ என்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘கடனை திரும்ப செலுத்தும் திறன் கொண்டவர்களின் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 287 கோடி ரூபாய் கடனை கடந்த 3 ஆண்டுகளில் தள்ளுபடி செய்தது ஏன்? என்பதற்கும் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். 2014-15ம் ஆண்டில் 49 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான கடன், 2015-16ம் ஆண்டில் 57 ஆயிரத்து 586 கோடி ரூபாயும், 2016-17ம் ஆண்டில் 81 ஆயிரத்து 683 கோடி ரூபாயும் என மொத்தம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 287 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2013-14ம் ஆண்டில் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரத்து 264 கோடி ரூபாயாகும். இந்நிலையில் கடந்த அக்டோபர் 24ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ஜூன் மாதத்தில் மட் டும் 7 லட்சத்து 33 ஆயிரத்து 137 கோடி ரூபாயாக உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 42 மாதங்களில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 873 கோடி ரூபாயாக மதிப்பு உயர்ந்திருப்பது உறுதியாகியுள்ளது’’ என்றனர்.