புதுச்சேரி,
அமித்ஷா நினைத்தால் புதுச்சேரியில் நாளையே ஆட்சி அமையும் என்று பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அரைசை அசைத்துக்கூட பார்க்க முடியாது என சுடச்சுட பதிலடி கொடுத்தார்.
புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எச்.ராஜா, ராகுல்காந்திக்கு காலனி எடுத்துக் கொடுக்கும் எடுபிடிதான் புதுவை முதல்வர் நாராயணசாமி என்றும், பாஜ தேசிய தைலைவர் அமித்ஷா நினைத்தால், இன்றே பாஜக ஆளும் மாநிலமாக புதுச்சேரி மாறும் எனவும் ஆணவகமாக பேசினார்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுலின் முன் பல்வேறு சவால்கள் காத்திருப்பதாகவும், அவற்றை யெல்லாம் முறியடித்து ராகுல் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என்றார்.
மேலும், ராஜாவின் ஆணவப் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் நாராயணசாமி, எச்.ராஜா ஒரு தலைவருக்குரிய அழகோடு பேசவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை தடுப்பது பாஜக தான் என்பது எச்.ராஜாவின் பேச்சிலிருந்து உறுதியாகி உள்ளது என்றும் கூறினார்.
மேலும், பாஜகவால் புதுச்சேரி காங்கிரஸ் அரசை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் நாராயணசாமி சுடச்சுட ராஜாவுக்கு பதில் அளித்தார்.