பிரேமா – அபி.. அன்று

பத்திரிகையாளர், எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் மணவாழ்க்கை வெள்ளிவிழா இன்று.

அழகான 25 ஆண்டுகால மண வாழ்க்கையில் முகிழ்த்தவை இரண்டு பெண் குழந்தைகள்.

“மகிழ்ச்சி, வாழ்த்துகள்! இதில் உள்ள செய்தி என்ன?” என்கிறீர்களா?

தம்பதியினர் பெயரே நமக்கு செய்தியை உணர்த்தும்..  பொள்ளாச்சி அபியின் இயற்பெயர் அக்பர். அவரது இணையரின் பெயர், பிரேமா.

இந்த நவீன காலத்திலேயே சாதி, மத மறுப்பு திருமணங்கள் எண்ணற்ற சங்கடங்களை… ஏன் ஆபத்துகளையும் சந்திக்கும் நிலையில்,  இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மதம் கடந்த திருமணம்.

அக்பரிடம் பேசினோம்…

“எப்படி காதல் உதித்தது..?”

“அப்போது கோவையில் கம்பெனி ஒன்றில் லேத் பிரிவில் நான் பணியாற்றி வந்தேன். பிரேமா, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பணியாற்றினார். நான் தொழிற்சங்க நடவடிக்கையில் தீவிரமாக இயங்கிவந்தேன். தொழிலாளர்கள் உரிமைக்காக இயக்க நண்பர்களுடன் போராடினேன். அதே போல பெண்கள் பிரிவில் பிரேமா, தொழிற்சங்க போராட்டங்களில் முன்னின்றார்.

போராட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. சந்திப்புகள், எங்களை நண்பர்களாக்கின.. நட்பு எங்களை காதலர்களாக்கியது” என்ற அக்பரிடம், “போராட்டம் என்ன ஆனது?” என்றோம்.

சாந்தினி – பிரேமா – சாலினி – அபி

குறுக்கிட்ட பிரேமா, “நாங்கள் வலியுறுத்திய கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஆண்கள் பிரிவில் அக்பரும் பெண்கள் பிரிவில் பிரேமாவும் பணியைவிட்டு விலக வேண்டும்” என்றது.

கோரிக்கைகள் நிறைவேறினால் சரி என்று நாங்கள் பணியிலிருந்து விலகினோம். ஆக போராட்டம் வெற்றிதான்” என்று சிரித்தார் பிரேமா.

அவர் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறார் அக்பர்:

“அதன் பிறகு ஆளுக்கு ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தோம். ஆனால் எங்களது காதலும், சந்திப்புகளும் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் இருவீட்டிலும் தகவல் கூறினோம்.

எதிர்பார்த்தபடியே இருவீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது குடும்பத்தில் என்னைப் பற்றியும் என் குடும்பத்தில் பிரேமாவைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம்தான். ஆனால், இரு குடும்பத்தினரும் தங்கள் உறவினர்களின் பார்வையை நினைத்து தயங்கினர்.

ஆகவே இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். நல்ல நாளாகத் தேடினோம்.  சோதிட ரீதியாக  அல்ல..  இது வேறு விதம்.

பாரதி பிறந்தநாளை தேர்ந்தெடுத்தோம். அன்று பதிவுத்திருமணம் செய்துகொண்டோம். அந்த நேரத்தில் எங்களுக்கு ஆதரவாக நின்ற தோழர்களில் முக்கியமானவர், சாட்சி கையெழுத்திட்டவர்.. ஆட்டோ சந்திரகுமார். இவர் எழுதிய லாக்கப் நாவல்தான் விசாரணை என்ற பெயரில் திரைப்படமாக வந்தது..” என்றார் அக்பர்.

இணையரின் காதல் வாழ்க்கை.. புத்தகமாக..

தொடர்ந்த பிரேமா, “திருமணத்துக்குப் பிறகு இருவரில் எவரும் மதம் மாறவேண்டியதில்லை என்று முன்பே தீர்மானித்திருந்தோம். அதே போல எங்களது குழந்தைகளுக்கும்  சாந்தினி, சாலினி என்று மத அடையாளங்கள் இல்லாத பெயர்களையே சூட்டினோம். அவர்களது பள்ளி சான்றிதழ்களிலும், “மதமற்றவர்கள்” என்று குறிப்பிட விரும்பினோம். ஆனால்…” என்றார்.

இடையில் புகுந்த அக்பர், “அது ஒரு பெரிய காமெடி. பிள்ளைகளுக்கு சான்றிதழ் பெற தாசில்தாரை சந்தித்தேன். அவரிடம், “மதமற்றவர்கள்” என்று என் பிள்ளைகளுக்கு சான்றிதழ் வேண்டும்” என்று வலியுறுத்தினேன்.  அவர் ஆடிப்போய்விட்டார். “அரசு அளித்திருக்கும் பட்டியலில் இப்படி ஓர் பிரிவே கிடையாது. அப்படித்தான் சான்றிதழ் கொடுத்தால் என் வேலை போய்விடும்” என்று பதறினார். சரி, ஏதோ ஒரு மதத்தை பதியவேண்டும்.. அவ்வளவுதானே என்று பிரேமாவின் மதமான இந்து என்று பதிந்துவிட்டேன்” என்று சிரிக்கிறார் அக்பர்.

“இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது என்றீர்கள்.. பிறகு சமாதானமானார்களா” என்றோம்.

அதற்கு அக்பர், “ஏற்கெனவே சொன்னது போல பரஸ்பரம் இருவர் மீதும் இரு குடும்பத்தினருக்கும் மரியாதை உண்டு. காலப்போக்கில் நாங்கள் வாழும் முறையைப் பார்த்து மரியைதை கூடியது… சில ஆண்டுகளில் இரு குடும்பத்தினரும் இயல்பாக எங்களுடன் கலந்து பழக ஆரம்பித்துவிட்டனர். இப்போது என் மூத்த மகளுக்கு என் உறவினர் தரப்பிலும் பிரேமா உறவினர் தரப்பிலும் மாப்பிள்ளைகள் வந்துகொண்டிருக்கின்றன.

எங்களது இருபத்தியைந்து வருட மணவாழ்க்கை எப்படிப்பட்டது என்பதற்கான சான்றிதழ் இது” என்று அக்பர் சிரிக்க.. பிரேமா புன்னகைக்கிறார்.

அக்பரை “பொள்ளாச்சி அபி” என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அந்த பெயரில்தான் பத்திரிகைளிலும் சிறுகதை, நாவல் புத்தகங்களிலும் எழுதி வருகிறார்.

“அபி என்று புனைப்பெயர் வைத்திருக்கிறீர்கள். அதன் விளக்கம்..?” என்றோம்.

“அக்பர் – பிரேமா.. இருவரின் முதல் எழுத்துகளை இணைத்து அபியாகவே மாறிவிட்டேன்” என்று சிரிக்கிறார் அக்பர்.. ஸாரி அபி.

அபி – பிரேமா.. இன்று..

இந்த இணையரின் காதல் திருமண அனுபவங்களே, “ஆதலினால் காதலித்தேன்” என்ற நூலாக வெளியானது. எழுதியவர் அபி. இவர், , எங்கேயும் எப்போதும் என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார்.

“பொன்விழா கண்ட காதல் தம்பதி நீங்கள்.. காதலர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்” என்றோம்.

உடனே பிரேமா, “நம்ம திருமண அழைப்பிதழ் பற்றிச் சொல்லுங்க” என்கிறார்.

அக்பர், “ “எங்கள் திருணத்தை முன்னிட்டு கோவை குஜராத் சமாஜில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைக்கிறோம்” என்று போட்டிருந்தோம். அதன் கீழ் கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகளைப் பதித்திருந்தோம்.

அவை..

“கீதை இந்துக்களையும் குரான் முஸ்லிம்களையும் பைபிள் கிறிஸ்தவர்களைப் படைத்தது போதும்.. இனியேனும் இவை மனிதர்களைப் படைக்கட்டும்!”  – சொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் அக்பர். உடன் பிரேமாவும்.

காதலர்களுக்கு… ஏன், ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் சொல்ல, இதைவிட  நல்ல செய்தி ஏது?