டில்லி
தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகளை பயங்கரமாக தாக்கிய ஓகி புயல் டில்லிக்கு பரிசு ஒன்று அளித்துள்ளது.
டில்லியில் காற்று மிகவும் மாசு பட்டு மிக மோசமான நிலையில் இருந்தது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியது தெரிந்ததே. காற்றின் மாசுக் குறியீடு கடந்த வாரம் 303 மைக்ரோகிராம் / க்யூபிக் மீட்டர் என்னும் அளவை எட்டி இருந்தது. இதை மிக மோசமான காற்று என குறிப்பிடப் பட்டிருந்தது.
தற்போது இந்த மாசுத் துகள்கள் குறைந்து வருகின்றன. ஓகி புயலின் காரணமாக தற்போது காற்று வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அதனால் மாசு குறையத் தொடங்கி உள்ளது. இந்தியாவின் வட பகுதி மாநிலங்கலில் உள்ள காற்று மாசுபாடை ஒகி புயல் சரி செய்யும் என நாசா இணையதளம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது.
இது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், “டில்லியின் காற்றின் தரம் படு மோசம் என்னும் நிலையில் இருந்து தற்போது மிக மோசம் என தரம் லேசாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் காற்றின் தரம் உயர்ந்து வருகிறது. காற்று மாசு காரணமாக காற்றின் நகர்வு மிக மிக மெதுவாக இருந்த நிலையில் தற்போது ஓரளவு காற்று நகர்ந்து வருகிறது. இது மேலும் தொடர்ந்து இனி காற்று நகர்வு மிகவும் எளிதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லி வாழ் மக்கள் தங்கள் துயரத்தை போக்க வந்த ஒகி புயலுக்கு தங்களின் நன்றியை இணைய தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.