கொச்சி
ஒரு காதல் ஜோடி மரத்தடியில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
கொச்சியில் உள்ள கல்லூரிகளில் ஒன்று மகாராஜா கல்லூரி. இந்தக் கல்லூரியில் அமர்நாத் என்னும் இந்து இளைஞரும் சஃப்னா என்னும் இஸ்லாமியப் பெண்ணும் படித்து வந்தனர். அமர்நாத் மலையாள இலக்கியத் துறையில் சஃப்னா வரலாற்றுத் துறையிலும் படித்து வந்தனர். அமர்நாத் கல்லூரி தேர்தலில் போட்டியிட்ட போது சஃப்னா அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இருவருக்கும் நட்பாகி காதல் மலர்ந்துள்ளது.
தற்போது அமர்நாத் பெங்களூருவில் வீடியோ எடிட்டராக பணி புரிந்து வருகிறார். சஃப்னா ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இருவரின் காதலும் இன்றும் தொடரவே இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மகாராஜா கல்லூரியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்நாத் சஃப்னாவுக்கு தாலி கட்டினார்.
இது குறித்து சஃப்னா, “மரத்துக்கு எந்த ஒரு மத அடிப்படையும் தெரியாது. அதைப் போலவே எங்களின் காதலுக்கு மத வித்தியாசம் கிடையாது. எனவே இரு மத முறைகளையும் விடுத்து நாங்கள் இந்த மரத்தடியில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தோம். அதற்கு எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் பெரும் உதவி செய்தனர். இந்தப் புதிய முறையை நாங்கள் ஆரம்பித்து வைத்துள்ளோம். இப்போது எனக்கு அமர் அணிவித்தது தாலி அல்ல. நான் அவர் உரிமை என்பதை ஊர்ஜிதப் படுத்தும் ஒரு நகை” எனக் கூறி உள்ளார். கணவருக்கு உதவி செய்ய சஃப்னா தனது வேலையை விடப்போவதாக தெரிவித்துள்ளார்.