சென்னை:

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்னை வந்தார்.

சென்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் எடப்பாடி பேட்டியளித்துள்ளார்.

தமிழக அரசு வைத்துள்ள பெரும்பாலான கோரிக்கையை கட்கரி ஏற்றுள்ளார் என்று அவர் தெரி வித்துள்ளார். ரூ.3000 கோடி செலவில் தூத்துக்குடி துறைமுகம் நவீனமயமாக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நெடுஞ்சாலை, நீர்வள மேலாண்மை மற்றும் துறைமுகங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்சியுடன் முதல்வர் எடப்பாடி யும் கலந்துகொண்டார்.

அப்போது நிதின் கட்கரியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது,  தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை அளித்திருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்தார்.

தமிழகத்தின் பெரும்பாலான கோரிக்கையை நிறைவேற்றித் தந்திருப்பதாகவும்,  தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்துவதற்கான நிதி வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்றும் கூறினார்.

மேலும்,   சுங்கச் சாவடிகளில் எலெக்ட்ரானிக் முறையில் சுங்கம் வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வருவது பற்றி பரிசீலனை  செய்வது வருவதாகவும்,  தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் கோரிக்கையையும் நிதின் கட்கரி பரிசீலிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.

மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உரிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாகவும்,  அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அனுமதி, நிதியுதவி குறித்து பரிசீலிப்பதாக நிதின்கட்கரி தெரிவித்துள்ளார் .

கோதாவரியில் இருந்து கடலில் கலக்கும் 3000 டிஎம்சி தண்ணீரை எடுத்து தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்  நிதின் கட்கரி உறுதி  அளித்துள்ளதாகவும்,  தமிழகத்தின் சார்பாக வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கையை நிறைவேற்றித் தந்த நிதின் கட்கரிக்கு நன்றி என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.