சபரிமலை
பக்தர்கள் ரூ.1000 அல்லது அதற்கு மேல் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யலாம் என ஆலய அதிகாரி அறிவித்துள்ளார்.
பொதுவாக கேரள கோவில்களில் சிறப்பு தரிசன முறை கடைபிடிக்கப் படுவதில்லை. அத்துடன் சபரிமலையில் அனைத்து மதத்தினரும் அனைத்து சாதியினரும் சமமாக அனுமதிக்கப்படுவார்கள். இது பலராலும் புகழப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சபரிமலையை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்ட் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளரை சந்தித்தார்.
அந்த சந்திப்பில், “சபரிமலையில் தேவஸ்தானம் சார்பில் கோவிலில் அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்துக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. இதற்காக சிறப்பு தரிசன திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அன்னதான திட்டத்துக்கு ரூ.1000 அல்லது அதற்கு மேல் அளிப்பவர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. அந்த ரசீதை காண்பித்து சிறப்பு வரிசை வழியாக பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்யலாம். இந்த சிறப்பு தரிசனம் மற்ற பக்தர்களுக்கு சிரமம் அளிக்காமல் ஒரு துணை போலீஸ் கமிஷனரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல் படுத்த உள்ளது” என அவர் தெரிவித்தார்.