டில்லி:
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக்சன் இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன்படி இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவைகளை வழங்க இருக்கிறது.
இந்தியாவில் ஏர்டெல் போன்றே உலகம் முழுக்க 36 நிறுவனங்களுடன் எரிக்சன் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளதாக எரிக்சன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா, ஓசியானா மற்றும் இந்திய பிரிவு மூத்த துணை தலைவர் நுன்சினோ மிர்டிலோ தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க் வழங்க ஏதுவாக ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றன. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் இதர சேவைகளை எரிக்சன் நிறுவனம் வழங்கி வந்துள்ளது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் 2020-ம் ஆண்டில் வழங்கப்பட இருந்தாலும், 5ஜி தொழில்நுட்பத்திற்கான செயல் விளக்கம் நாட்டின் வலுவான 4ஜி சுற்றுச்சூழலை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என மிர்டிலோ தெரிவித்தார். அதிவேக டேட்டா வழங்கும் 5ஜி தொழில்நுட்பம் 2026-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 489 கோடி வருவாயை இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு ஈட்ட வாய்ப்புகள் இருப்பதாக எரிக்சன் தெரிவித்துள்ளது.