திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிபிஐ(எம்) மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மேயர் பிரசாந் காயமடைந்தார்.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று நடந்த கூட்டத்தில், உயர்கோபுர விளக்குகள் அமைப்பது தொடர்பாக சிபிஐ (எம்) மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அனைத்து பகுதிகளிலும் உயர்கோபுர விளக்குகளை அமைக்க வேண்டும் என்று பாஜக தீர்மானம் கொண்டு வந்தது.

இது தொடர்பாக எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு தான் கடிதம் எழுதியிருப்பதாகவும், அதனால் அவசியம் இல்லாத இடங்களில் உயர்கோபுர விளக்குகள் அமைக்க முடியாது என்று மேயர பிரசாந்த் தெரிவித்தார். மேலும், அவர் எழுதிய கடிதத்தில், ‘‘அவசியம் உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த உயர்கோபுர விளக்குகள் அமை க்கப்பட வேண்டும். இதர பகுதிகளில் இந்த உயர்கோபுர விளக்குகள் நிறுவுவதற்கான நிதியை தெரு விள க்குகள் அமைக்க பயன்படுத்தப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து சுகாதாரம், பொது பணிகள், பொது சுகாதாரம் போன்ற தீர்மானம் தொடர்பாக விவாதம் நடந்தது. இதோடு இன்றைய கூட்டத்தை முடிக்க மேயர் திட்டமிட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாஜக கவுன்சிலர்கள் மாமன்றத்தின் மைய பகுதிக்குள் நுழைந்து மேயரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது சிபிஐ(எம்) கவுன்சிலர் பினு, பாஜக மாமன்ற தலைவர் கிரிகுமாரை தாக்கினார். இதனால் அங்கு இரு கட்சி கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மேயருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேயரை தாக்கியதாக புகார் கூறப்பட்ட பாஜக கவுன்சிலர் பிரதீப் குமார் கூறுகையில், ‘‘ நாங்கள் மேயரை தாக்கவில்லை. தீர்மானம் தொடர்பாக விவாதம் நடத்த மேயர் மறுத்ததால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். நாங்கள் எங்களது ஜனநாயக உரிமைக்காக போராடினோம்’’ என்றார்.

சிபிஐ (எம்) கவுன்சிலர் பினு கூறுகையில், ‘‘ மேயர் மீதான தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட் டுள்ளது. மாமன்ற கூட்டத்தில் இருந்து பத்திரிக்கையாளர்கள் வெளியேறிய பின் இந்த தாக்குதலில் பாஜக.வினர் ஈடுபட்டனர். மேயரை மாமன்றத்தின் மைய பகுதிக்கு இழுத்து வந்து தள்ள வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?’’ என்றார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் கோஷம் எழுப்பினர். முன்னதாக மாநகராட்சியில் மேம்பாட்டு பணிகள் முடங்கி இருப்பதாக கூறி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கருப்பு தினமாக அனுசரித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அக்கூட்டணி எம்எல்ஏ கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் கலந்துகொண்டார்.