டில்லி
மளிகைக்கடைகளை ஆன்லைனில் இணைக்கும் புதிய திட்டம் ஒன்றை முகேஷ் அம்பானி துவக்க உள்ளார்
முன்பு ஒருமுறை ரிலையன்ஸ் குழுமத்தின் ஸ்தாபகர் மறைந்த திருபாய் அம்பானி, “எப்போது தபால் கார்டை விட டெலிஃபோன் கட்டணம் குறைகிறதோ அப்போது தான் இந்திய மக்களின் வாழ்வில் புரட்சி நடந்ததாகப் பொருள்” எனக் கூறியுள்ளார். தற்போது அவர் மகன் முகேஷ், “ஜியோ” மூலம் அன்லிமிடட் கால்ஸ் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி மிகவும் மலிவான டேட்டாவை கொடுத்ததால் மற்ற மொபைல் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடு பட்டுள்ளன.
தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்தப் போவதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். எகானாமிக் டைம்ஸ் நிறுவனம் நடத்திய ஒரு பரிசளிப்பு விழாவில் அவர் கலந்துக் கொண்டு இது குறித்து அறிவித்துள்ளார். அவர் தனது உரையில், “தற்போது அயல்நாடுகளில் முதலீடு செய்வது வழக்கமாகி வரும் வேளையில். ரிலையன்ஸ் இந்தியாவில் ரூ.3.5 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. அந்த முதலீடான ஜியோ மூலம் நிறுவனமும் லாபம் அடைந்துள்ளது. தற்போது புதிய திட்டம் ஒன்றை ரிலையன்ஸ் செயல் படுத்த உள்ளது.
தற்போதுள்ள ஈ காமர்ஸ் முறையில் அனைத்துப் பொருட்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் கிடைக்கின்றன. அதனால் உள்ளூரில் உள்ள மளிகைக் கடைகளின் வர்த்தகம் பாதிக்கப் படுகின்றது. அதைத் தடுக்க மளிகைக்கடைகளையும், உற்பத்தியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் ஜியோ மூலம் இணைக்கும் திட்டம் உள்ளது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் கூப்பன் வழங்கப்படும். அவர்கள் அதை மளிகைக்கடையில் கொடுத்து பொருட்களை வாங்கலாம்” எனக் கூறி உள்ளார்.
அவர் கூறிய இந்த திட்டத்தின் படி ரிலையன்ஸ் எந்தச் செலவும் செய்யப்போவதில்லை என தெரிய வருகிறது. தள்ளுபடி கூப்பன்களை உற்பத்தியாளர்களோ அல்லது கடை உரிமையாளர்களோ வழங்குகின்றனர். அதனால் ரிலையன்சுக்கு செலவு இல்லை. அத்துடன் மக்கள் கடைக்கு சென்று வாங்குவதால் ரிலையன்ஸுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பும் கிடையாது. அது கடைக்காரர்களின் பொறுப்பு ஆகி விடுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு இலவச விளம்பரம் கிடைப்பதுடன் கடைக்காரர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். இதனால் ஜியோவின் வாடிக்கையாளர்களும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிறு மளிகை வியாபாரிகள் ஈ காமர்ஸ் முறையால் வர்த்தகம் பாதிக்கும் என நினைப்பதால் இந்த திட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள். தற்போது ஈ காமர்ஸ் முறையில் ஃப்ளிப்கார்ட், அமேசான், பிக் பஜார் போன்ற நிறுவனக்கள் உள்ளன. அவைகளுக்கு 5% வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். அது தவிர பல பெரிய மளிகைக்கடைகளுக்கு 8% வாடிக்கையாளர்கள் உள்ளனர். மீதமுள்ள 87% வாடிக்கையாளர்களை குறி வைத்து ரிலையன்ஸ் இந்த திட்டத்தில் இறங்கி உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.