சென்னை,
சசிகலா குடும்பத்தினர் மீதான 5 நாட்கள் வருமான வரி சோதனையை தொடர்ந்து, சென்னை வருமான வரி அலுவலகத்தில் சசிகலா உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா ஆஜராகி உள்ளார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி சசிகலா குடும்பத்தினரின் 187 இடங்களில் 1800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய வருமான வரி சோதனை நடத்தினர். 5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின்போது, கோடிக்க ணக்கான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள், 1840 கோடி அளவிலான வரி ஏய்ப்பு, 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், 5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், விலைமதிப்பில்லா வைரங்கள் என ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சிறையில் இருந்து, தனது கணவரை பார்க்க பரோலில் வந்தபோது தங்கியிருந்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிலும் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது.
அப்போது, அவரது வீட்டில் இருந்து ஏராளமான சொத்து பத்திரங்கள், தங்க நகைகள், வைர நகைகள் கைப்பற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, திவாகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெயா டிவி பொதுமேலாளர் ஆகியோர் இன்று சென்னை நுக்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுத்தது.
அதன்படி இன்று காலை 11 மணி அளவில், வருமான வரி அலுவலகத்தில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார்.
அதுபோல, ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜனும் ஆஜராகி உள்ளார். அவரிடம் ஜெயா டிவி வரவு, செலவு கணக்குகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திவாகரனும் இன்று ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.