டில்லி:
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 5ம் தேதிக்குள் துணைக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று டில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தினகரனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் உருவாகி பிளவு ஏற்பட்டது. தற்போது சசிகலா – தினகரன் தலைமையில் ஒரு அணியாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வேம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு நீடிக்கிறது.
இதையடுத்து கட்சியின் சின்னமான இரட்டை இலைக்கு இரு அணிகளும் சொந்தம் கொண்டாடின. இதனால் தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தையும் கட்சி பெயரையும் முடக்கியது.
யாருக்கு இவை சொந்தம் என்பது குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முழுதும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டில்லியின் மத்திய பகுதியில் உள்ள ஒரு விடுதியில் டில்லி காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில், சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் இருந்து ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் பிஎம்டபியூ, மெர்சிடீஸ் கார்களும் கைப்பற்றப்பட்டன.
இரட்டை இலை சின்னத்தைப் பெற டி.டி.வி. தினகரன் சார்பாக லஞ்சம் கொடுககவே சுகேஷ் சந்திரசேகர் அந்த பணத்தை வைத்திருந்ததாக டில்லி காவல்துறையினர் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கில் டி.டி.வி. தினகரனும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகராவும் கைது செய்யப்பட்டனர்.
ஆனஆல் இது குறித்த குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆகவே டிடிவி தினகரன் இந்த வழக்கில் இருந்து தப்பி விட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 5ம் தேதிக்குள் துணைக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று டில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதில் தினகரன் பெயர் சேர்க்கப்படலாம் என்று ஒரு யூகம் நிலவுகிறது.
இன்று காலை முதல் சசிகலா – தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் தொடர்புள்ளவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அடுத்த (துணைக்) குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் சேர்க்கப்படலாம் என்று ஒரு தகவல் உலவ ஆரம்பித்திருக்கிறது. அப்படி தினகரன் பெயர் சேர்க்கப்பட்டால், அவருக்கு பெரும் சிக்கலாக இருக்கும்.