சென்னை,

மிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதம் 28ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,  வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேலும் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. அதையடுத்து,  அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை அருகே வங்கக்கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து விட்டது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கமான 23 செமீ க்கு பதில் 1செமீ குறைந்து 22 செமீ பெய்துள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது,

சென்னையில் அதிக மற்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பில்லை. அதனால் யாரும் பயப்பட தேவையில்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வானது வங்காள விரிகுடா நோக்கி நகர்ந்து வருவதால் மெல்ல மெல்ல வலுவிழந்து வருகிறது.

பெரும்பாலான மாவட்டங்களில் நவம்பர் 8-ம் தேதிக்கு பின் மழை பெய்ய வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.