மும்பை

மோடி அலை மங்கி வருவதாக சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கருத்து தெரிவித்துள்ளார்.

பா ஜ க வின் தோழமைக் கட்சிகளில் ஒன்று சிவசேனா.  இந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் தற்போது மத்தியில் ஆளும் பா ஜ க வைக் குறை கூறுவது வழக்கமாகி வருகிறது.   சிவசேனாவின் அதிகார பூர்வமான பத்திரிகையான சாமனா மூலம் அடிக்கடி பா ஜ க பற்றிய நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.  தற்போது சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டு பேசினார்.

அந்த கருத்தரங்கில், “மோடி அலை குஜராத்தில் மங்கி வருகிறது.   ஜி எஸ் டி அமுலாக்கத்தின் பிறகு குஜராத் மக்களிடையே மோடி மீதான கோபம் அதிகரித்துள்ளது.   அதனால் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா ஜ க மிகவும் கடினமான போட்டியை சந்திக்க நேரிடும்.   ராகுல் காந்தியும் நாட்டை வழிநடத்த தயாராகிக் கொண்டு வருகிறார்.   இனியும் அவரை பப்பு (சிறு குழந்தை) என அழைப்பது தவறாகும்.   அரசியலில் மிகவும் பலம் மிகுந்தவர்கள் வாக்காளர்களே.  அவர்கள் நினைத்தால் யாரையும் பப்பு (சிறு குழந்தை) ஆக்கி விட முடியும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டேவும் கலந்துக் கொண்டுள்ளார்.    குஜராத் தேர்தல் தேதிகள் அறிவிப்புக்குப் பின் ரவுத் இது போல கருத்து தெரிவித்தது,  சிவசேனா தனது ஆதரவை படிதார் அமைப்புக்கு அளிக்கப்போவதாக வந்துள்ள செய்தியை ஒட்டி அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.   மேலும்  சிவசேனா 2015ஆம் வருடம் 100 ராகுல் காந்திகள் சேர்ந்தாலும் எக்காலத்திலும் மோடியின் அலைக்கு சமமாக மாட்டார்கள் என தெரிவித்ததையும் அவர்கள் நினைவு கூறுகின்றனர்.