ராஞ்சி:
ஆதார் இணைக்காத குடும்பத்துக்கு ரேசன் பொருட்களை வழங்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் மோகன்பூர் அருகே பகவான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மராண்டி (வயது 75). இவர் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர்களது குடும்பத்தில் வருவாய் ஈட்டி வந்த மராண்டியின் பேரன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட வறுமை காரணமாக இவர்களது குடும்பம் ரேசன் பொருட்களை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ரேசன் கார்டில் ஆதாரை இணைக்கும் பயோ மெட்ரிக் சிஸ்டம் மராண்டியின் மகள் மனோடியின் கைரேகையை அங்கிகரிக்கவில்லை. மழை காரணமாக இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பத்திற்கு கடந்த இரண்டு மாதங்களாக ரேசன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. உறவினர்கள் வீடுகளின் உணவு பொருட்களை வாங்கி வந்து சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனிதும் இது போதவில்லை. இந்நிலையில் கடந்த 23ம் தேதி மராண்டி இறந்துவிட்டார். ரேசன் பொருட்கள் வழங்காததால் உணவு கிடைக்காமல் மராண்டி பட்டினியால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மலைவாழ் மக்கள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் ஆதார் இணைப்பு இல்லாததால் ரேசன் பொருள் வழங்க மறுத்து உயிரிழப்பு ஏற்படுவது இது 3வது சம்பவமாகும்.
மோகன்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் கூறுகையில், ‘‘மராண்டி வீட்டிற்கு ஒரு டாக்டருடன் சென்று பார்த்தேன். அவரது உடலை பரிசோதித்த டாக்டர் அது இயற்கையான மரணம் என்று தான் தெரிவித்தார். இவரது குடும்பத்திற்கு ரேசன் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
கடந்த செப்டம்பர் மாதத்தில 15 கிலோ ரேசன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது ரேசன் கார்டில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் ரேசன் கடைக்கு வராததால் அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய பொருட்கள் மட்டும் வழங்கப்படாமல் உள்ளது. அதுவும் அவர்கள் கடைக்கு வாங்க வரவில்லை’’ என்றார்.
மராண்டி குடும்ப்பத்திகு 50 கிலோ ரேசன் அரிசியையும், ரூ. 10 ஆயிரத்தையும் பிடிஓ வழங்கினார். அரசு நலத்திட்டங்கள், மானிய பொருட்களை பெற ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் இணைக்காத மக்களுக்கு ரேசன் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்று சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பல ரேசன் கடைகளில் ஆதார் இணைக்காத ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.