பூனே

மானேக்சந்த் குரூப் நிறுவனத் தலைவர் நேற்று இரவு புற்று நோயால் மரணம் அடைந்தார்.

ரசிக்லால் எம் தரிவால் பிரபல குட்கா தயாரிப்பு நிறுவனமான மானேக்சந்த் குருப்பின் தலைவர் ஆவார்.   இவர் தனது தந்தையாரின் தொழிலான பீடித் தயாரிப்புத் தொழிலில் முதலில் இறங்கினார்.  பிறகு குட்கா எனப்படும் மெல்லும் புகையிலைப் பொருளுக்கு மாறினார்.  பிறகு இந்த குட்கா உற்பத்தியில் முடிசூடா மன்னராக திகழ்ந்தார்.   இவர் பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார்.   ஷிர்பூர் நகராட்சித் தலைவராக 21 வருடங்கள் பணி புரிந்தவர்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.  இவருக்கு வாயில் புற்றுநோய் இருந்தது.  சமீபத்தில் நிமோனியா காய்ச்சலும் சேர்ந்துக் கொள்ளவே இவரை கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 8.15 மணிக்கு மரணம் அடைந்தார்.   இறந்த ரசிக்லாலுக்கு 71 வயதாகிறது.  இவருக்கு மனைவியும், நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

குட்கா உபயோகிப்போருக்கு புற்று நோய் வரும் வாய்ப்புகள் உள்ளதால் அதை தடை செய்ய வேண்டும் என நாடெங்கும் போராட்டம் நடைபெறும் வேளையில் அதை தயாரிப்பவரே புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளது பலரையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.