தோஹா:
கூலிப்படைகள் கொண்ட ராணுவத்தின் மூலம் போர் தொடுத்து தோஹாவை கைப்பற்ற ஐக்கிய அரசு எமிரேட்ஸ் திட்டமிட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது என்று கத்தார் முன்னாள் துணை பிரதமர் அப்துல்லா பில் ஹமத் அல் அத்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கட்டுரை ஸ்பானிஷ் நாளிதழான ஏபிசி.யில் வெளியாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்த் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கத்தார் மீது கடந்த ஜூன் மாதம் பொருளாதார தடை விதித்தன. ஈரான் பயங்கரவாதிகளை கத்தார் ஆதரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை கத்தார் மறுத்தது.
இந்நிலையில் அப்துல்லா பில் ஹமத் அல் அத்தியா மேலும் கூறுகையில், ‘‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு தனியார் செக்யூரிட்டி கான்ட்ராக்டரை நியமனம் செய்துள்ளது. அவர்கள் ஆயிரகணக்கான கூலிப்படையினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்கள் மூலம் கத்தார் மீது போர் தொடுத்து தோஹாவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அதிபர் எமிரை அகற்றிவிட்டு சவுதி ஆதரவாக செயல்படும் ஒருவரை அப்பதவியில் அமர்த்த முடிவு செய்துள்ளனர்’’ என்றார்.
மேலும், ஏபிசி நாளிதழ் கட்டுரையில் ‘‘ராஜாங்க அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பச்சை கொடி காட்ட மறுத்துள்ளார். சவுதியின் மேற்கு பகுதியில் உள்ள லிவா என்ற எமிரேட்ஸ் ராணுவ தளத்தில் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முன்பு இந்த பகுதி அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு பகுதியாகும். அப்போது இந்த பகுதி ‘‘பிளாக் வாட்டர்’’ என்று அழைக்கப்பட்டது. இங்கு தற்போது 15 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கொலம்பியன் மற்றும் தெற்கு அமெரிக்காவை சேர்ந்தவர்கள்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளாக் வாட்டர் ராணுவ ஒப்பந்ததாரர்கள் கடந்த 2007ம் ஆண்டு பாக்தாத் மீது நடத்திய தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். ‘‘கொலம்பியன்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்குள் கட்டுமான தொழிலாளர்கள் என்ற போர்வையில் நுழைந்து ரகசிய கூலிப்படை ராணுவத்தை கட்டமைக்கப்பட்டுள்ளது’’ என்று கடந்த 2011ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ‘‘இதற்கு பிளாக் வாட்டர் நிறுவனர் எரிக் பிரின்ஸ் 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்ததார்’’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ‘‘கொலம்பியன்கள் மட்டுமின்றி தெற்கு ஆப்ரிக்கா மற்றும் வெளிநாட்டு துருப்பு படையினர் அமெரிக்காவின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஜெர்மன், பிரிட்டன் சிறப்பு படைப் பிரிவு, ஃபிரெஞ்ச் வெளிநாட்டு படை பிரிவு ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர்’’ என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
சமீபத்தில் அமெரிக்காவுக்கான எமிரேட்ஸ் தூதர் யூசுப் அல் ஒதாய்பா அனுப்பிய ஒரு மெயிலில்,‘‘கத்தாரை கைப்பற்ற சவுதி அரேபியா நெருங்கிவிட்டது’’ என்று தெரிவித்திருந்தார். ‘‘கடந்த செப்டம்பர் மாதத்திலேயே கத்தார் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா முடிவு செய்திருந்தது. ஆனால் டிரம்ப் அமைதியாக இருக்கும்படி கூறியதை தொடர்ந்தே இந்த திட்டம் கைவிடப்பட்டது’’ என்று டிரம்புக்கு நெருக்கமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.