வாஷிங்டன்

லகில் பசியால் வாடும் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் இந்தியா 100ஆவது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் பசியால் வாடும் உலகநாடுகள் என்னும் பட்டியலை சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.  வாழிங்டனை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனத்தின் பட்டியலில் 119 நாடுகள் இடம் பெற்றிருந்தன.  இதில் மிகவும் பின்தங்கிய நாடுகள் என கூறப்படும் நாடுகளான நேபாளம் (72) மியான்மர் (77), வங்கதேசம் (88), இலங்கை (84) சீனா (29) வட கொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளது.  உலகில் மிகுந்த வறுமை மிகுந்த நாடுகளான மத்திய ஆஃப்ரிக்க நாடுகளும் 43 லிருந்து 50 ஆவது இடத்தை பிடித்துள்ளன.

ஆனால் முன்னேற்றம் அடைந்து வரும் நாடு எனக் கூறப்படும் இந்தியா மேலே குறிப்பிட்ட நாடுகளை விட பின் தங்கி 100 ஆவது இடத்தில் உள்ளது.  பாகிஸ்தான் மேலும் பின் தங்கி 106ஆம் இடத்தில் உள்ளது.  இந்தியா உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக பட்டியலில் உள்ளதும், உலகில் உணவு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிப்பதும் குறிப்பிடத் தக்கது.

உலக பசியால் வாடும் மக்கள் குறியீடு 31.4 ஆக உள்ளது. இதில் இந்தியா அதிக பட்ச குறியீடுகளைப் பெறும் நாடாக உள்ளது.  உலக அளவில் பசியால் வாடும் மக்கள் குறியீடு உயர்ந்துள்ளது.  தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகில் ஒன்பது மக்களில் ஒருவர் பசியால் வாடுகிறார்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் இந்தியாவில் 21% குழந்தைகள் உயரத்துக்கேற்ற எடையில் இல்லாமல் எடை குறைவாக உள்ளன.   கடந்த 2005-06ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 20% ஆக இருந்த இந்த குறியீடு தற்போது 1% உயர்ந்துள்ளது.  இந்த நிலை உலக நாடுகளில் இந்தியாவைத் தவிர ஜிபோடி, இலங்கை, சூடான் ஆகிய நாடுகளில் அதிகம் உள்ளது.  அதே நேரத்தில் ஆரோக்கியமான குழந்தைகள் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டு கணக்குப் படி 29% ஆக இருந்தது தற்போது 38.4% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.