
ஐதராபாத்
தெலுங்கானாவில் அமைந்துள்ள யேதாத்ரி நரசிம்மர் கோவிலை ரூ.1800 கோடி செலவில் புதுப்பிக்க தெலுங்கான அரசு திட்டமிட்டுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது யேதாத்ரி. இங்கு பழங்கால நரசிம்மர் கோயில் ஒன்று உள்ளது. சுற்றிலும் எட்டு மலைகள் அமைந்துள்ள இந்தக் கோயில் ஒரு மலைக் கோயில் ஆகும். மிகப் பழமையான இந்தக் கோயிலை புனரமைக்க சந்திரசேகர ராவின் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.1800 கோடி செலவிடப்பட உள்ளது.
இந்தக் கோயில் புனரமைப்பு பணிகளாக 11 ஏக்கர் பரப்பளவில் ஏழு விதானங்கள் அமைக்கப்படும். இதில் 100 அடி உயர ராஜகோபுரமும் அடங்கும். இது தவிர 1400 ஏக்கரில் பயணிகள் தங்குமிடம், பார்க்கிங் வசதிகள், அர்ச்சகர் குடியிருப்புகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. சுற்றுப்புற மலைகளும் சீரமைக்கப்பட்டு கோயிலுக்கு வந்து போக வசதியாக 4 வழி சாலைகள் அமைக்கபடும். 500 சிற்பிகள் இந்த கோயில் புனரமைப்பு பணியில் அமர்த்தப்படுவர். முதல் கட்ட வேலைகளை 2018ஆம் வருடம் மே மாதத்துக்குள்ளும், முழுமையான கட்டமைப்பு வேலைகளை 2019ஆம் வருடம் இறுதிக்குள்ளும் முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நிர்வாக இயக்குனர் கிஷன் ராவ் இது குறித்து கூறுகையில், “இந்த யேதாத்ரி கோயில் புனரமைப்பு வேலைகள் முடிந்த பின் இது திருப்பதி வெங்கடாசலபதி கோயிலை விடப் பெரியதாகவும் அதிக வசதிகளுடனும் அமைந்திருக்கும். இந்த கோயிலுக்கு தினமும் சுமார் 10000 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலின் வருட வருமானம் சுமார் 80 – 200 கோடி ரூபாய்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலில் சிமிண்ட் கற்களோ செங்கற்களோ உபயோகப்படுத்தாமல் முழுவதும் கருமை நிற கிரானைட் கற்களே உபயோகப்படுத்தப்படும்.” என தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், “தெலுங்கானா அரசு, மாநில முன்னேற்றங்களுக்கு பணம் இல்லாமல் கடன் வாங்கும் நிலையில் இருக்கும் போது இந்தக் கோயில் புனரமைப்பு தேவையற்ற ஒன்று. திருப்பதி கோயிலின் ஆண்டு வருமானமான ரூ.2600 கோடியை இந்தக் கோயில் அடைய பல ஆண்டுகள் ஆகும்” எனக் கூறி உள்ளனர்.
[youtube-feed feed=1]