மதுரை,

மிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக மக்களிடையே பீதி நிலவுகிறது.

இந்நிலையில்,கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது சுகாதாரத்திற்கு சவாலாக உள்ளதாகவும் கொசுக்களை ஒழிக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. டெங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் அக்டோபர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை  உத்தரவிட்டது. வழக்கு விசாரணையும் அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.