சென்னை,
போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடம் ஆக்க கூடாது என அரசு ஆணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான வாரிசுகள் தாங்கள்தான் என்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சமீபத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு கிண்டி வட்டாட்சியரிடம் மனு அளித்து, அது தள்ளுபடி ஆனது.
இந்நிலையில், தீபா ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை, அரசு நினைவிடம் ஆக்கப்போவதாக ஆணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை, ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதற்கு அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது பாட்டி சந்தியா போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் தான் எனது தந்தை ஜெயராமனும், அத்தை ஜெயலலிதாவும் வசித்தனர். பாட்டியின் மறைவுக்கு பிறகு இந்த வீடு அத்தை ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது.
நானும் எனது தம்பி தீபக்கும் படிப்புக்கு தி.நகர் வீட்டுக்கு குடியேறினோம். இந்த நிலையில் எனது அத்தை ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருக்கு நானும், எனது தம்பி தீபக்கும்தான் நேரடி வாரிசுகள்.
அத்தை ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ் கார்டன், கொடநாடு, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கும், தம்பி தீபக்குக்கும்தான் சொந்தம்.
இந்த நிலையில் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக அரசு அறிவித்து உள்ளது.
இதை எதிர்த்து முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்தேன். எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.
எனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.