திருச்சி,
இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்சு தர அரசு மருத்துவமனை மறுத்ததால், இறந்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் கைகளிலேயே தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.
இதுபோனற் துரதிருஷ்டவசமான செயல் வடமாநிலங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள அயன்புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்.கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பொன்னு
காய்ச்சல் காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னப் பொன்னுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி நேற்று சின்னப்பொன்னு மரணத்தை தழுவினார்.
இதனால் வேதனையடைந்த அவரது குடும்பத்தினர், இறந்த சின்னப்பொன்னுவிடன் உடலை எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்சு கோரினர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழித்து வந்துள்ளனர்.
இதன் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
அதைத்தொடர்ந்து தனியார் ஆம்புலன்சு மூலம் உடலை செல்ல முயன்றதையும் அரசு மருத்துவ மனை நிர்வாகத்தினர் தடுத்து பிரச்சினை செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து இறந்த சின்னப்பொன்னுவின் உடலை, மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்சுக்கு எடுத்துச்செல்ல ஸ்டெச்சர் கூட தர அரசு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துவிட்டனர். வேறு யாரையும் உதவிக்கு வரவும் அனுமதிக்கவில்லை.
இதனால் செய்வதறியாது திகைத்த சின்னப்பொன்னுவின் கணவர் தனது மகன் சசிகுமார் உதவியுடன் இறந்த சின்னப்பொன்னுவின் உடலை தங்களது கைகளில் தூக்கிச்சென்று தனியார் ஆம்புலன்சில் ஏற்றி சென்றுள்ளனர்.
மனிதாபிமானமற்ற அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களின் இந்த செயலுக்கு அந்த பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பொதுவாகவே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் கனிவின்றி அநாகரிகமாக நடந்துகொள்ளும் நிலையில் தற்போது மனிதாபிமானமற்ற நிலையில் வடமாநிலங்களை போன்று செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரி வருகின்றனர்.