சென்னை,
தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம் உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6ந்தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
தமிழக அரசின் 10 சதவிகித வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஐநாக்ஸ் போன்ற மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டு நிலையில், வரும் 6ந்தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கெனவே பைரஸி முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜி.எஸ்.டி., என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக அரசால் கடந்த மாதம் 27-ம் தேதி அன்று தமிழ்ப் படங்களுக்கு அறிவித்த 10 சதவிகித கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம்.
இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியா பாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களை மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ்ப் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அதனால், வருகிற வெள்ளிக்கிழமை 6-ம் முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.