டில்லி,
இரட்டை இலை முடக்கம் தொடர்பாக வரும் அக்டோபர் 6ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் மற்றும், பொதுக்குழு உறுப்பினர்களின் பிரம்மான பத்திரங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.சி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் திடீர் மனு கொடுத்துள்ளார்.
அதில்,அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும் என்றும், அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்ததும், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், அதிமுகவில் இனிமேல் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது. கடைசி வரைக்கும் ஜெயலலிதாதான் பொதுச்செயலாளர் என்று கட்சி விதியில் திருத்தம் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்நிலையில் வரும் 6ந்தேதி அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கம் குறித்து இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையில், கட்சியையும், சின்னத்தையும் மீட்க தற்போதைய இபிஎஸ்,ஓபிஎஸ் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் அணி தனியாக செயல்பட்டு வந்தபோது, அவருக்கு ஆதரவு அளித்து வந்த முன்னாள் எம்.பி . கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் திடீர் மனு அளித்துள்ளார்.
அதிமுக உறுப்பினர் என்ற முறையில் முன்னால் எம்பி கே.சி.பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு கோரிககை மனு அளித்துள்ளார்.
அதில், பொதுச்செயலாளர் பதவி இனி கிடையாது என்ற பொதுக்குழு தீர்மானத்தை ஏற்கக்கூடாது என்றும், பொதுச்செயலாளர் தேர்தல் 6 மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்றும், அதிமுகவின் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அடிப்படை உறுப்பிர்களின் உரிமைகளை காக்க வேண்டும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர் மனு கொடுத்திருப்பதால், அதிமுக இரு அணிகளும் இணைந்ததாக வெளியில் அறிவித்தாலும் உள்ளுக்குள் பூசல் நடைபெற்று வருவது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.