சென்னை:
சிறுநீரகம், கல்லீரல் செயல் இழப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் அவரை பார்க்க அவரது மனைவி சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுநீரகம், கல்லீரல் நோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற நடராஜன், தற்போது பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது கல்லீரல் நிலைமை மோசமானதால் மாற்றுஉறுப்பு அறுவைச்சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
இதையடுத்து மூளைச்சாவு காரணமாக உறுப்பு தானம் செய்வோரிடமிருந்து கல்லீரலைப் பெறுவதற்காக தமிழக மாற்றுஉறுப்பு தான காத்திருப்போர் பட்டியலில் நடராஜன் பதிவு செய்திருந்தார். ஆனால், இதுவரை அவருக்கு கல்லீரல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிரபல கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர் நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே உடல்நிலை மோசமடைந்த நிலையில் தனது மனைவி சசிகலாவை பார்க்க நடராஜன் விரும்பியதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகிறது.
இதனால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனது கணவரைப் பார்ப்பதற்கு பரோலில் விடுவிக்க அனுமதி கோரியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஓரிரு நாளில் சசிகலா தனது கணவரை காண பரோலில் வருவார் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.