கொல்கத்தா:,

மேற்குவங்காளத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, மூத்த தலைவரான முகுல் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்டுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கான நடவடிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ளார்.

சாரதா சிட்பண்ட் மோசடி காரணமாக சிபிஐ-ல் விசாரயை செய்யப்பட்ட மூத்த தலைவர் முகுல் ராய்,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இவர் மம்தாவுக்கு அடுத்தப்படியாக கட்சியில் கோலோச்சியவர். இவர் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

சாரதா சிட்பண்ட் முறைகேடு காரணமாக சிபிஐ விசாரணையை தொடர்ந்து, அவர் பாரதிய ஜனதா தலைவர்களுடன் நெருக்கம் கொண்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் முகுல் ராய் விடுவிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முகுல்ராய்,  ‘கனத்த மனதுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சி தொடங்கிய ஆரம்பகாலத்தில் உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட்ட முக்கிய நபர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் கட்சியின் செயற்குழுவில் இருந்து விலகும் இந்த முடிவை மிகவும் கனத்த மனதுடன் அறிவிக்கிறேன்.

எனது இந்த முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக துர்கா பூஜை முடிந்த பின்னர் வெளிப்படையாக தெரிவிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முகுல் ராய் எம்.பி. ஆறு ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின்  பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கட்சி கட்டுப்பாடுகளை மீறியதற்காக முகுல் ராய் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.