சிவகங்கை,
விவசாயிகள் குறைதீர்ப்பு நேரத்தின்போது, அலட்சியாக மொபைலில் விளையாடிக்கொண்டிருந்த அதிகாரிகள் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மொபைலில் விளையாடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்.
கடந்த வாரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட கலெக்டருடன் விவாதித்து கொண்டிருந்த வேளையில், கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட அதிகாரிகள், கலெக்டருக்கு பின் இருக்கையில் இருந்து, மக்களின் குறைகளுக்கு செவிமடுக்காமல் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குறைதீர்ப்பு கூட்டம் தொடக்கத்தில் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது ஏதோ அரசு உத்தரவுக்காக சம்பிரதாயமாக நடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதன் எதிரொலிதான் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் வேதனைகளை தெரிவித்து வருகின்ற வேளையில், நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்க வேண்டிய அதிகாரிகளோ, தங்களது செல்போனிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி கேம் விளையாடிக்கொண்டும், சமூக வலைதளங்களை மேய்ந்து கொண்டிருந்தனர்.
அதிகாரிகளின் இந்த அலட்சியக்போக்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. அவர்கள்மீது கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.