சென்னை,

திமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் உச்சக்கட்டமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இதன் காரணமாக அந்த 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடை பெற்றால், அங்கு, திமுக காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று  அரசமைக்க வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்றக்கட்சி கொறடா விஜயதாரணி கூறி உள்ளார்.

இதுகுறித்து விஜயதாரணி கூறியதாவது,

தற்போது சபாநாயகரால் 18 எம்எல்ஏக்கள்  தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது சரியா தவறா என்பது குறித்து உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும். அதற்கான கட்டாயம் தற்போது அதிகரித்துள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் அதே கட்சியில்தான் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் கட்சி மாறவில்லை. ஆனால், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றுதான் கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பது தவறு. இதுகுறித்த வழக்கில் உயர்நீதி மன்றமோ, உச்சநீதி மன்றமோ சபாநாயகரின் உத்தரவு தவறு என்று அறிவித்தால், எடப்பாடி அரசு மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இப்படியொரு சூழ்நிலையில், அவையில் உள்ளவர்கள்  வாக்களிக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாக்குக்கு, அதிகமாக  ஒரு வாக்கு இருந்தால் கூட எடப்பாடி பழனிசாமி அரசு  தப்பித்துக்கொள்ளும். அதுவே மைனாரிட்டி அரசாக மாறிவிடும். ஆனால் அதுவே நிரந்தர தீர்வு கிடையாது.

ஆனால், கோர்ட்டு, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று கூறிவிட்டால்,  தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் உள்பட 19 தொகுதிகளிளும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்.

அப்படியொரு வாய்ப்பு ஏற்பட்டால், காங்கிஸ் திமுக கூட்டணி அந்த இடைத்தேர்தலில் போட்டி யிட்டு அமோக வெற்றி பெறும்.  அதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை நிரூபித்து திமுக ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.